பிரளயம் முடிந்தபிறகு படைப்புத் தொழிலைத் தொடங்க குடத்தில் தங்கிய உயிர்களை வெளிப்படுத்தியபோது குடம் மூன்றாக உடைந்தது. அடிப்பாகம் கும்பகோணத்திலும், நடுப்பாகம் கலயநல்லூரிலும், வாய் பாகம் இத்தலத்திலும் விழுந்ததால் இப்பெயர் பெற்றது. திருமணபிந்து முனிவரின் தொழுநோயை போக்க இறைவன் குடத்திலிருந்து வெளிப்பட்டதால் இப்பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
மூலவர் 'கோணேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சற்று உயர்ந்த பாணத்துடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'பெரிய நாயகி' என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கின்றாள். இக்கோயிலில் அம்பாளே துர்க்கையாக வழிபடப்படுவதால் தனியாக துர்க்கை சன்னதி இல்லை.
பிரகாரத்தில் அனுமதி விநாயகர், மாலை நேர விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், நவக்கிரகங்கள், இரண்டு பைரவர்கள், காசி விஸ்வநாதர், சூரியன், சந்திரன், நடராஜர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. கருவறை விமானத்தின் மீது ஏகபாத மூர்த்தி உள்ளார்.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று.
பிருகு முனிவர், சூதமாமுனிவர், தாலப்ய முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|